< Back
மாநில செய்திகள்
சட்டமன்ற நாட்களை குறைத்து ஜனநாயகத்தின் குரல் வளையை தி.மு.க. அரசு நசுக்குகிறது - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சட்டமன்ற நாட்களை குறைத்து ஜனநாயகத்தின் குரல் வளையை தி.மு.க. அரசு நசுக்குகிறது - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
13 Dec 2024 2:22 PM IST

சட்டமன்றத்திலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்தி, விவாதித்து, நிறைவேற்றுமிடமாகவும்; மக்களின் குறைகளை மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டி தீர்வு காணும் இடமாகவும்; நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்கும் இடமாகவும்; மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கும் மையமாகவும் விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 376-ல், "கழக ஆட்சியில் சட்டமன்றம் குறைந்தது 100 நாட்களுக்கு மேல் முறையாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2021-ம் ஆண்டில் 29 நாட்களும், 2022-ம் ஆண்டில் 33 நாட்களும், 2023-ம் ஆண்டில் 29 நாட்களும், 2024-ம் ஆண்டில் 18 நாட்களும் சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. அதாவது 1,365 நாட்களில் வெறும் 109 நாட்கள் மட்டுமே சட்டமன்றம் கூடியுள்ளது. அதுவும், குறிப்பாக குளிர்கால கூட்டத் தொடரை இரண்டே நாளில் முடித்து சாதனை படைத்துள்ள அரசு தி.மு.க. அரசு. இந்த வாக்குறுதியில் கூட தி.மு.க. இரட்டை வேடத்தை கடைபிடிப்பது ஆட்சி அலங்கோலத்தின் உச்சகட்டம்.

சட்டமன்றம் நடைபெற்ற நாட்களிலாவது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றதா என்றால் அதுவும் இல்லை. போற்றுபவர்களுக்கு அதிக வாய்ப்பும், மக்கள் குறைகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு குறைந்த வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. அரசை எதிர்த்து குறைகளை சுட்டிக்காட்டுபவர்களின் உரைகள் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றன.

தி.மு.க ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீரழிவு, நிதிச் சீரழிவு, போதைப் பொருள் நடமாட்டம், போதைப் பொருள் விற்பனை, கொலை-கொள்ளை வழக்குகளை முடிப்பதில் மெத்தனம், மின் கட்டண உயர்வு, இதர வரிகள் உயர்வு ஆகியவற்றைப் பற்றி பேசக்கூடிய சூழ்நிலை உருவாகி இதன் காரணமாக தி.மு.க. ஆட்சியின் அலங்கோலம் அம்பலத்திற்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் சட்டமன்ற நாட்களை குறைக்கும் முயற்சியிலும், அரசிற்கு எதிராக பேசுபவர்களின் குரலை நசுக்கும் முயற்சியிலும் தி.மு.க. இறங்கி இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் ஜனநாயகத்தின் குரலை முடக்கும் செயல் ஆகும். இதன்மூலம், ஜனநாயகத்தின் மையமாக விளங்கும் சட்டமன்றத்தில் சுதந்திரமாக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க முடியாத சூழ்நிலையை தி.மு.க. அரசு உருவாக்கியுள்ளது. இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்.

"ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிக் கூடமாக ஆக வேண்டும். அப்பொழுதுதான் ஜனநாயகம் வளரும்" என்றார் பேரறிஞர் அண்ணா. போறிஞர் அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லிக் கொண்டு, ஜனநாயகத்தின் மையமாக விளங்கும் சட்டமன்றத்திலேயே ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மக்களின் மனக்குமுறலை மக்கள் பிரதிநிதிகள் மூலம் ஜனநாயக ரீதியில் வலியுறுத்தும் இடமாக விளங்கும் சட்டமன்றத்தை இனி வருங்காலங்களிலாவது அதிக நாட்கள் கூட்டவும்; ஆட்சியின் அவலங்களை, மக்களின் குறைகளை சுட்டிக்காட்டும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பினை வழங்கவும் நடவடிக்கை எடுத்து, ஜனநாயகம் தழைத்தோங்குவதை உறுதி செய்ய வேண்டுமென்று முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்