பட்டாசு ஆலை பாதுகாப்பில் தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தனம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
|விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை,
விருதுநகர் அருகே அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பட்டாசு ஆலை பாதுகாப்பில் தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .
முறையான பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளாமல், பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம். பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன்; இனியாவது பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.