
கோர்ட்டு தீர்ப்பை ஏற்று தி.மு.க. கொடிகளை அகற்ற பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் தீர்ப்பை ஏற்று தி.மு.க. கொடிகளை அகற்ற பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த ஜனவரி 27-ந்தேதி வெளியிட்ட உத்தரவில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறையின் வசமுள்ள இடங்களில் வைக்கப்பட்டு உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
எனினும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. அதுபற்றி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 6-ந்தேதி நடத்திய விசாரணை முடிவில், இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனை சுட்டிக்காட்டி தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தங்களுடைய பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்குட்பட்ட இடங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கழகத்தின் கொடி கம்பங்களை, கட்சியினர், அவர்களாகவே முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்றிட வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன். அப்படி கட்சி கொடி கம்பங்களை அகற்றிய விவரங்களை, தலைமை கழகத்திற்கு தெரியப்படுத்தவும் என கேட்டு கொண்டுள்ளார்.