உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
|உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை தி.மு.க. அரசு வாட்டி வதைப்பது கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் பொத்த மின் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளான காற்றாலை மற்றும் சூரிய சக்தியின் பங்கை அதிகரிப்பது மற்றும் அவற்றின் இலக்குகளை நிறைவேற்றுவது தொடர்பான நோக்கங்களுக்காக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்டது. மேற்படி நிறுவனம், நிதி இழப்பினை மேற்கோள்காட்டி தொழில் நிறுவனங்களுக்கான உச்ச நேரம் (Peak Hour) மற்றும் சூரிய சக்தி சரிகட்டலில் (Solar Power Adjustments) மாற்றங்களை மேற்கொண்டு அதற்கான கருத்துருவினை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்தக் கருத்துருவில் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் மிக அவசியமானவை என்று தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தெரிவித்துள்ளது என்று பத்திரிகையில் செய்து வந்துள்ளது. அதே சமயத்தில், தொழில் நிறுவனங்கள், குறிப்பாக சூரிய சக்தியில் அதிகமாக முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து கவலை அடைந்துள்ளன.
இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் தங்களது பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்க நவம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு பசுமை எரிசந்தி கழகத்தின் கருத்துருவில், காலை 6 மணி முதல் 10 மணி வரையிலான உச்ச நேரம் என்பது, காலை 6 மணி முதல் 8 மணி வரை எனவும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்பது மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை எனவும் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மாலை நேர உச்ச நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டதற்கு காரணம் குளிரூட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதும். தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் இயங்குவதும்தான் காரணம் என்றும், இரவு 10 மணியிலிருந்து தொழில் நிறுவனங்கள் சூரிய சக்தியை பயன்படுத்த அனுமதிப்பது என்பது மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்றும், அதனால்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு பசுமை பசுமை எரிசக்தி கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் மின் நுகர்வு மற்றும் அதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும். தற்போது, தொழில் நிறுவனங்கள் இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை தன்னியக்க உற்பத்தி நிலையங்களிடமிருந்து பெறப்படும் சூரிய சக்தியை கொண்டு தங்கள் தொழில்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், உச்ச நேரத்தை மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை நீட்டிப்பது என்ற தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் கருத்துகு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், மாலை 5 மணிக்கு மேல் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும்.
இதன் காரணமாக, சூரிய சக்தியில் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் வெருவாக பாதிக்கப்படுவதோடு, இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்படும் என்று தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, மின்சார கட்டண உயர்வினாலும், ஆண்டுக்கு ஒருமுறை உபரக்கூடிய மின்சார கட்டண உயர்வினாலும், உச்ச நேர மின் கட்டண உயர்வினாலும், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் இதுபோன்ற கருத்துரு தொழில் துறையினரை பெரும் கவலை அடையச் செய்துள்ளது. திமுக அரசின் இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது தொழில் துறையினரை வாட்டி வதைக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு பகபை எரிசக்தி கழகத்தினை கருத்துருவினை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .