தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் 1.31 லட்சம் பேர் முன்பதிவு
|தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4 ஆயிரத்து 900 சிறப்பு பஸ்கள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2 ஆயிரத்து 910 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பஸ்களுடன் சென்னையில் இருந்து 700 பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 நாட்களுக்கு 14 ஆயிரத்து 086 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக அரசு பஸ்களில் (இன்று முதல் அக்.30வரை) சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 1.31 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பஸ்கள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.