< Back
மாநில செய்திகள்
தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி: கட்டுப்பாடுகள் என்னென்ன..?
மாநில செய்திகள்

தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி: கட்டுப்பாடுகள் என்னென்ன..?

தினத்தந்தி
|
20 Oct 2024 1:34 PM IST

தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை,

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், புதுபடங்களின் ரிலீஸ் என எல்லாம் இருந்தாலும், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நம் அனைவரது நினைவுக்கும் வருவது பட்டாசுகள் தான். தீபாவளிக்கு முதல் நாள் இரவில் இருந்தே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு ஏற்றார் போல் ஆண்டுதோறும் விதவிதமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துகொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாள் முழுவதும் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் மாசு பெரும் அளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கு என சுப்ரீம்கோர்ட்டு சில கட்டுப்பாடுகள் விதித்தது. அதன்படி, மாநில அரசுகளும் தங்களது மாநிலங்களில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுபாடு விதித்து வருகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு நேரக்கட்டுப்பாட்டை அறிவிக்குமா? அல்லது தளர்வுகள் ஏதாவது இருக்குமா? என மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் என்னென்ன..?

1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

1. அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்