இல்லம் தோறும் தீப ஒளி.. இனிமை பொங்கும் தீபாவளி திருநாள்..!
|தீபாவளி பண்டிகையின்போது, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகை தீபாவளி எனும் தீப ஒளி திருநாள். வாழ்வில் தீமைகள் அகன்று நன்மைகளை கொண்டுவரும் நாள். தீபங்களை வரிசைப்படுத்தி வைத்து வழிபாடு செய்யும் நாளாக இதனை போற்றுகிறோம். நரகாசுரன் என்னும் அசுரனை அழித்த தினத்தையே தீபாவளியாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன. இந்துக்களை பொருத்தமட்டில் அந்த நரகாசுரனையே, மனதின் தீமைகளோடு ஒப்பீடு செய்கிறார்கள்.
இரண்யாசுரன் என்ற அசுரன், பூமியை கடலுக்குள் மறைத்து வைத்தான். அதை மீட்பதற்காகவே மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்தார். இரண்யாசுரனை அழித்து, பூமியை தன் இரு கொம்புகளுக்கு இடையில் வைத்து தூக்கிக் கொண்டு கடலில் இருந்து மேலே வந்தார். அப்போது வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனே 'நரகாசுரன்'.
பிரம்மாவிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற நரகாசுரன், 'தன் தாயாலேயே அழிவு வரவேண்டும்' என்ற வரத்தையும் பெற்றிருந்தான். அந்த வரத்தால் தனக்கு அழிவே இல்லை என்று நரகாசுரன் நம்பினான். ஆனால் கிருஷ்ண அவதாரத்தில் அவரது வதம் நிகழ்ந்தது.
மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்தார். பிரம்மனிடம் இருந்து வரத்தைப் பெற்ற நரகாசுரன், மூவுலகங்களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கினான். அவன் அசாமில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு தன்னுடைய ராஜ்ஜியத்தை நடத்தி வந்தான். அவனது துன்பத்தால் துவண்டு போன தேவர்களும், முனிவர்களும், மக்களும், கிருஷ்ணரிடம் தங்களின் குறைகளை போக்கும்படி வேண்டினர். அவர்களுக்கு உதவ நினைத்த கிருஷ்ணர், சத்யபாமாவையும் உடன் அழைத்துக் கொண்டு, நரகாசுரன் ஆட்சி செய்த இடத்திற்குச் சென்றார். அவனது ராஜ்ஜியத்தின் காவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்து நகருக்குள் நுழைந்தார். போருக்கான சங்கை முழங்கினார்.
சங்கொலி கேட்டு கோட்டையில் இருந்து வெளியே வந்த நரகாசுரன், தன் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழைந்த கிருஷ்ணனை கண்டு ஆத்திரமடைந்தான். அவருடன் போரிட்டான். அப்போது நரகாசுரன் எய்த அம்பு ஒன்றால் தாக்கப்பட்டது போல நடித்து, தேரில் சாய்ந்து விழுந்தார் கிருஷ்ணர். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யபாமா தன்னுடைய கணவருக்காக, நரகாசுரனுடன் போரிட்டு அவனை வதம் செய்தாள். நரகாசுரன் பெற்ற வரத்தின்படியே, தன் தாயின் கரத்தாலேயே அழிவை சந்தித்தான்.
இந்த கதையில் 4 கோட்டைகளை உடைத்தெறிந்து, 5-வது கட்டமாக நரகாசுரனின் நகருக்குள் கிருஷ்ணன் நுழைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இது பஞ்சபூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கு இறைவன் அருள்பாலிப்பதை உணர்த்துகிறது. இதில் 'கிரி துர்க்கம்' நிலத்தையும், 'அக்னி துர்க்கம்' நெருப்பையும், 'ஜல துர்க்கம்' நீரையும், 'வாயு துர்க்கம்' காற்றையும் குறிப்பதாகும். பஞ்ச பூதங்களில் 4 இங்கு கூறப்பட்டுள்ளதால் ஐந்தாவதான ஆகாயமும் சேர்ந்தே வரும்.
நரகாசுரனை வதம் செய்த பின்னர் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவுக்கு, மகனை இழந்த துக்கம் ஏற்பட்டது. அதே நேரம் 'மகன் இறந்தது தன் ஒருத்திக்கான துக்கம் மட்டுமே. ஆனால் அவனுடைய இறப்பு, மக்களுக்கான மகிழ்ச்சி' என்பதை புரிந்து மனதைத் தேற்றினாள். இருந்தாலும், அவள் கண்ணனிடம், "என் மகனை இழந்த துக்கம் எனக்கு இருந்தாலும், உலக மக்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக்கூடாது. அன்று எல்லோரும் கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள்.
அதன்படியே தீபாவளி பண்டிகையின்போது, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும். அதிகாலையில் நீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், தீபாவளி தினத்தில் மட்டும் வெந்நீரில் நீராடலாம் என்று சொல்லப்பட்டது. அன்றைய தினம் மாலையில் வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
மக்களின் உள்ளங்களிலும், அவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சியை வழங்கும் தீபாவளி திருநாள், உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாமல் சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களாலும், வெவ்வேறு காரணங்களைக் கூறி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி திருநாள் நாளை மறுதினம் (31-10-2024) கொண்டாடப்படுகிறது.