< Back
தமிழக செய்திகள்
திண்டுக்கல்: சிறுமலையில் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை
தமிழக செய்திகள்

திண்டுக்கல்: சிறுமலையில் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை

தினத்தந்தி
|
1 March 2025 3:46 PM IST

வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருட்களை சோதனையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் சிறுமலை அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. சிறுமலை மலைப்பாதையின் 17-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உடல் அழுகிய நிலையில் வாலிபரின் பிணம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், அந்த தோட்டத்துக்கு வந்து சோதனையிட்டனர். பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி சென்றனர்.

அப்போது பிணத்தின் அருகில் கிடந்த பேட்டரி, வெடிகுண்டு மற்றும் வெடிபொருட்களை போலீசார் எடுத்தனர். அப்போது திடீரென்று வெடிகுண்டுடன் இணைக்கப்பட்டிருந்த பேட்டரி வெடித்தது. இதில் போலீஸ்காரர்கள் மற்றும் வனப்பாதுகாவலர் ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த போலீஸ்காரர்களும், வனப்பாதுகாவலரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருட்களை சோதனையிட்டனர். அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சாபு (வயது 35) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் சிறுமலை மலைப்பாதையில் மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால், பயங்கரவாத தக்குதலுக்கு திட்டமா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்