
சென்னை
டிஜிட்டல் கைது: சென்னை பெண்ணிடம் பணம் பறித்த 2 பேர் கைது

டிஜிட்டல் கைது என கூறி சென்னையை சேர்ந்த பெண்ணிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
டிஜிட்டல் கைது என்பது ஒரு புதிய சைபர் மோசடி, இதில் சைபர் குற்றவாளிகள் சிபிஐ அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் போல நடித்து உங்கள் பெயரில் வந்த பார்சல் ஒன்று எங்களிடம் சிக்கியுள்ளது. அதில், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது. இதனால் உங்களை கைது செய்யப் போகிறோம். இவ்வாறு வீடியோ அழைப்புகள் மூலம் டிஜிட்டல் கைது செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடியில் பலரும் சிக்கி தங்களது பணத்தை இழந்துள்ளனர்.
அதேபோல ஒரு டிஜிட்டல் கைது சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் டிஜிட்டல் கைது மூலம் கடந்த மாதம் 3ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் சுமார் ரூ. 1 லட்சத்தை மோசடி செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் இணையவழி குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், மேடவாக்கத்தை சேர்ந்த முகமது யூனுஸ் என்கிற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.