
108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பேராசிரியர் உயிரிழப்பா? - தமிழக அரசு விளக்கம்

108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பேராசிரியர் உயிரிழந்தாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள படூரில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் ஆம்புலன்சில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு. மாணவர்கள் போராட்டம் என வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, 108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் பற்றாக்குறை என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது தவறான செய்தி. இந்த சம்பவம் நடந்த பல்கலைக்கழகத்துக்கு அருகே அமைந்துள்ள கேளம்பாக்கம், நாவலூர், கண்டிகை, திருவிடந்தை, திருப்போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, அங்கிருந்து அழைப்பு ஏதும் வரவில்லை, அங்கு ஆம்புலன்ஸ் செல்லவும் இல்லை.
வேறு தனியார் ஆம்புலன்ஸ் வாகனமே சென்றுள்ளது. 108 ஆம்புலன்ஸ்களில் உயிர் காக்கும் உபகரணங்கள் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின் (108 ஆம்புலன்ஸ்) திட்ட இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.