
கோப்புப்படம்
கோயம்புத்தூர்
அ.தி.மு.க.வை குறிப்பிடவில்லை - அண்ணாமலை விளக்கம்

பா.ஜ.க.வை திட்டுவதையே சிலர் நோக்கமாக கொண்டு இருக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, "பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள்" என்று கூறினார். அண்ணாமலை அ.தி.மு.க.வை குறிப்பிடுகிறாரா என்று கேள்விகள் எழுந்தது.
அண்ணாமலை பேசியது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை குறிப்பிட்டாரா? தவறாக பேசக்கூடாது. பா.ஜ.க. கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அ.தி.மு.க.வை அல்ல. அ.தி.மு.க.வை பொறுத்தவரை கட்சி தொடங்கியது முதல் இன்று வரை எந்த கட்சியிடமும் கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரிந்திரம் கிடையாது' என்று கூறினார்
இந்த நிலையில் தான் அ.தி.மு.க.வை குறிப்பிடவில்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்ட அண்ணாமலை, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கூட்டணி குறித்து நானும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தெளிவாக கூறி இருக்கிறோம். நேற்று நான் பேசும்போது அ.தி.மு.க.வை குறிப்பிடவில்லை. பா.ஜ.க.வின் வளர்ச்சி பற்றியே பேசினேன். விவாதத்துக்காக நான் கூறியதையும், எடப்பாடி பழனிசாமி கூறியதையும் திரித்துப் பேசுகிறார்கள்.
தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் கலந்து கொண்டு, பா.ஜ.க.வை திட்டுவதையே சிலர் நோக்கமாக கொண்டு இருக்கிறார்கள். அரசியல் விமர்சகர்கள் நடுநிலையாக பேசுவதில்லை. அவர்களுக்கு தி.மு.க. மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் குறிக்கோள். எது போன்ற கூட்டணி வர வேண்டும் என அரசியல் விமர்சகர்களே முடிவு செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.