< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் யானை குடில் அருகே பக்தர்கள் செல்ல தடை
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் யானை குடில் அருகே பக்தர்கள் செல்ல தடை

தினத்தந்தி
|
19 Nov 2024 12:32 PM IST

திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கியதில் பாகன்-உறவினர் உயிரிழந்தனர்.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 26 வயதான தெய்வானை யானை உள்ளது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த பாகன் உதயகுமார் கவனித்து வந்தார்.

நேற்று மாலையில் யானையை பராமரிக்கும் பணியில் பாகன் உதயகுமார் மட்டும் இருந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்காக உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பலுகல் பகுதியை சேர்ந்த சிசுபாலன் வந்தார். அப்போது சிசுபாலன், யானையின் அருகே நின்று செல்பி எடுத்ததுடன் யானையின் உடலில் தட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆக்ரோஷமடைந்த யானை திடீரென்று சிசுபாலனை தும்பிக்கையாலும், காலாலும் தாக்கியது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாகன் உதயகுமார் ஓடிச் சென்று சிசுபாலனைக் காப்பாற்ற முயன்றார். அப்போது உதயகுமாரையும் யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் யானையின் அருகிலேயே மயங்கி கிடந்தனர். பின்னர் யானையை சாந்தப்படுத்தி 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உதயகுமார், சிசுபாலன் ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தெய்வானைக்கு மதம் பிடிக்கவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக்குழுவினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையின் குடில் அருகில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை தெய்வானையின் குடிலைச் சுற்றி தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளன. போலீசார் மற்றும் கோயில் பாதுகாலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை உணவு சாப்பிடவில்லை என்றும் தண்ணீர் குடிப்பதுடன் இலைகளை மட்டுமே உண்பதாக பாகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்