திருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் தகவல்
|கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் காலையில் விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் வீதி உலா வருகின்றனர்.
இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் கோவிலை சுற்றி உள்ள மாடவீதியில் வீதி உலா வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற பக்தி கோஷத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்துனர்.
கார்த்திகைதீப திருவிழாவின் சிகர நிகழ்வாக 2,668 அடி உயர மலை உச்சியில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபத்தை காண இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து அடிப்படை பணிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்) பேசுகையில், திருவண்ணாமலையில் வரலாறு காணாத கனமழை பெய்ததின் காரணமாக, மலையில் 3 இடங்களில் சரிவு ஏற்பட்டு, அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கார்த்திகை தீபம் என்பது அண்ணாமலையார் கோவிலுடைய முக்கிய திருவிழாவாகும். தீபத்தன்று ஆண்டுதோறும் 2 ஆயிரம் பேர் மலை ஏறுகிறார்கள். ஆனால் இந்த முறை அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? அதற்காக என்ன திட்டங்களை அரசு அமைத்திருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில், எந்த தடையும் இல்லாமல் திருவண்ணாமலை மலையில் தீபம் ஒளிரும் என்றும் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தேவையான மனித சக்திகள் பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "திருவண்ணாமலை மகா தீபத்தையொட்டி மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகமானோரை மலை மீது ஏற்ற கூடாது என நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புவியியல், ஆணையாளர் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய அறிவிப்பை வெளியிடுவார். கொப்பரை, நெய் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தேவையான ஆட்கள் மட்டுமே மலைமீது செல்ல அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.