
சதுரகிரிக்கு சென்ற பக்தர் திடீர் உயிரிழப்பு

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகியில் பக்தர்கள் குவிந்தனர்.
விருதுநகர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தை அமாவாசையை முன்னிட்டு நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் குவிந்தனர்.
நேற்று அதிகாலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கினர். தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பக்தர்கள் மலைக்கு எடுத்து செல்கிறார்களா? என தீவிர சோதனை செய்த பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை வடிவேல்கரை காந்தி நகரை சேர்ந்தவர் குமரவேல்(வயது 45). இவர் பேரையூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி வாழைத்தோப்பு வழியாக மலையேறி சதுரகிரிக்கு சென்றார். அப்போது திடீரென குமரவேலுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்; ஆனால் செல்லும் வழியிலேயே குமரவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாப்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பத்கர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.