
கோப்புப்படம்
சென்னை
முஸ்லிம் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக அரசை முன்மாதிரியாகக் கொண்டு, எதிர்வரும் பட்ஜெட் அறிவிப்பில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை நிதி ஒதுக்கீட்டுடன் தமிழக அரசு அறிவிப்புச் செய்திட வேண்டும்.
கர்நாடகா முதல்வர் சித்தராமையா இந்த ஆண்டு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கான பல முக்கிய திட்டங்கள் நிதி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் திட்டப் பணி ஒப்பந்தங்களில், வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதுபோல, முஸ்லிம் சமூகத்திற்கும் ரூ.2 கோடி வரையிலான பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் திட்டம், சிறுபான்மை சமூக பெண்களின் உயர்கல்வியை ஆதரிக்கும் வகையில், வக்பு வாரியத்திற்குச் சொந்தமான காலியிடங்களில் இந்த நிதி ஆண்டில் 16 பெண்கள் கல்லூரிகள், பள்ளிவாசல் இமாம்களுக்கு மாதம் 6,000 ரூபாய் கவுரவத் தொகை, வக்பு சொத்துகள் மற்றும் அடக்க ஸ்தலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.150 கோடி, முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ரூ.50 லட்சம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய ஐடிஐ கல்லூரி, முஸ்லிம் பெண் மாணவர்களுக்குத் தற்காப்பு பயிற்சி உள்ளிட்ட பல திட்டங்கள் அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களைப் புறந்தள்ளி, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு சித்தராமையா அரசு பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இதுபோன்ற விளிம்புநிலை முஸ்லிம் சமூக மக்களின் நலனுக்கான திட்டங்களைத் தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.
ஆனால், தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அவர்களின் மேம்பாடுகளுக்கான திட்ட அறிவிப்புகள் இடம்பெறுவது இல்லை. வழிபாட்டுத் தலங்களைப் பழுது பார்ப்பதற்கான அறிவிப்பைத் தவிர்த்து வேறு எந்த விதமான சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லை. இது சிறுபான்மை சமூகங்கள் மீதான சமூக நீதி அரசின் அக்கறையின்மையை வெளிக்காட்டுகிறது. தர்காக்கள், பள்ளிவாசல்களைப் புனரமைப்பது மட்டுமே ஒரு அரசின் சிறுபான்மை சமூக நலன் திட்டமாக அறிவிப்பது ஏற்புடையதல்ல. அதையும் தாண்டி ஏராளமான செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் உள்ளன என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பட்ஜெட்டில் சிறுபான்மை சமூகங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதால், சிறுபான்மை சமூக மக்களுக்காகத் தனி பட்ஜெட்டை அரசு வெளியிட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது. கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் சூழல், தொழில் ஆகியவற்றை மேம்படச் செய்யும் அறிவிப்பாக அது இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றது. அதற்காக அரசை வலியுறுத்தி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றது.
சிறுபான்மை சமூக மக்களின் 69 சதவீத வாக்குகளைப் பெற்ற சமூகநீதி அரசு, கடந்த 4 ஆண்டுகளாக அந்த சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக எந்த திட்டத்தையும், அறிவிப்பையும், நிதி ஒதுக்கீட்டையும் செய்யாதது சிறுபான்மை சமூக மக்களிடையே இந்த அரசு குறித்த வெறுமையையே ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சச்சார் கமிட்டி, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்றும் வகையிலும், வேளாண் பட்ஜெட்டைப் போன்று, சிறப்புக் குழுக்களை அமைத்து, கர்நாடக அரசைப் போன்று, சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை, நிதி ஒதுக்கீட்டுடன் தனி பட்ஜெட் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.