நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம்
|நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இன்று (03.02.2025) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தில் 2021-2022 முதல் 2024-2025 வரையிலான ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காவிரி வடிநில பகுதிகளிலுள்ள பாசனக் கால்வாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு தூர்வாரும் பணிக்கான மதிப்பீடுகளை விரைந்து தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தினார். 2025-2026-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய பணிகள் குறித்து பொறியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழுமத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், நீர்வளத்துறையின் அரசு சிறப்பு செயலாளர் சு.ஸ்ரீதரன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் சா.மன்மதன் மற்றும் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.