பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை
|பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களுக்கும் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே.பாலாஜி பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் பாலாஜி 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கு வராமல் வேறொருவரை வேலைக்கு நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி தொடக்க கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.