கவர்னரை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் - திமுக அறிவிப்பு
|கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
சென்னை,
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் கவர்னர்கள், பாஜக அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். கவர்னர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு. கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் மாநில உரிமைகளை சிதைத்து, மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அரசியல் சாசன சட்டப்படி கவர்னருக்கு தரவேண்டிய மரியாதையை திராவிட மாடல் அரசு அளித்து வருகிறது. ஆனால், கவர்னர் தொடர்ந்து தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் சட்டசபை மாண்பையும் குலைக்கும் வகையில் நடந்து வருகிறார். மாநிலங்களின் தனித்த அடையாளங்களை அழித்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே பண்பாடு என்ற ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவந்து மாநில சுயாட்சியை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு கவர்னரை கருவியாக பயன்படுத்த முயல்கிறார்கள்.
மாநில சுயாட்சியை உயிர் கொள்கையாக தூக்கிப் பிடிக்கும் திமுக அதை ஒருக்காலும் அனுமதிக்காது. மாநில சுயாட்சியை பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரணாக இருந்து தடுத்து நிறுத்துவார். திராவிட சுவரை தாண்டி ஆளுநரும் நுழைய முடியாது ஆரியமும் நுழையவிட மாட்டோம். பாஜகவின் எந்த முயற்சியும் இங்கே பலிக்காது.
எத்தனை இடையூறுகள் வந்தாலும் மாநில உரிமை, மாநில சுயாட்சியை விட்டு கொடுக்காத மண் தமிழ் மண். மாநில உரிமை, மாநில சுயாட்சி, மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி போன்ற விவகாரங்களை எல்லாம் முன்வைத்து மத்திய அரசுடன் திமுக போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் ஏஜெண்ட்டாக செயல்படும் கவர்னரை காப்பாற்றவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றும் வகையிலும் அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணி வித்தைகளை காட்டிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவின் துரோகங்களை புரிந்து கொண்ட தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை தொடர்ந்து பத்து தேர்தல்களில் தோற்கடித்த பிறகும் தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுக்கும் அரசியலை (எட்டப்பன்) எடப்பாடி பழனிசாமி செய்து வருகின்றார். திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என்றைக்குமே மாநில உரிமைகளையும் தமிழ்நாட்டு மக்களின் நலனையும் விட்டுக் கொடுக்காது.
தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் கவர்னரை கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் நாளை (07.01.2025) காலை 10 மணியளவில் "மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும். மாநில உரிமையில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்று சேர்வோம்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத, தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மதிக்காத கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும். "கவர்னர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு" என நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம். கள்ளக்கூட்டணி சேர்ந்து ஆளுநரைக் காப்பாற்றி, தமிழ்நாட்டைச் சிறுமைப்படுத்த முயலும் அதிமுக-பாஜகவை அம்பலப்படுத்துவோம்! திராவிடச் சுவரை தாண்டி ஆளுநரும் நுழைய முடியாது ஆரியமும் நுழையவிட மாட்டோம்! இது மாநில உரிமைக்கான போர். இதில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.