அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் - தி.மு.க. அறிவிப்பு
|அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்துக்கு நேற்று முன்தினம் உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அப்போது அம்பேத்கர் பெயரை தொடர்ந்து கூறுவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சித்தார். அதாவது, 'அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்றார்.
அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அவர் இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் புயலை கிளப்பின.
இந்த நிலையில் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவைக் கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று (19-12-2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.