< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் தலித்துகள் துயரமான நிலையில் உள்ளனர் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தலித்துகள் துயரமான நிலையில் உள்ளனர் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

தினத்தந்தி
|
7 Dec 2024 9:33 AM IST

தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

அம்பேத்கரின் 68-வது நினைவு தின நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, தேசத்துக்கு பங்களிப்பு வழங்கி வரும் சிறந்த பிரமுகர்களுக்கு விருதுகளை வழங்கினார். அந்த வகையில், நடிகர் பிரேம்ஜி, கிராமிய பாடல் தம்பதி செந்தில் - ராஜலட்சுமி உள்ளிட்டோர் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் இருந்து விருதுகளை பெற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

விரிவான, வலுவான மற்றும் உறுதியான அரசியலமைப்பை வடிவமைப்பதிலும், நீதி சார்ந்த மற்றும் சமத்துவ இந்தியாவுக்கான அரசியலமைப்பு அடித்தளத்தை அமைப்பதிலும் அம்பேத்கர் முக்கிய பங்காற்றினார். தலித் சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தலித்துகள் துயரமான நிலையில் உள்ளனர்.

தலித் சமூக பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வழக்குகளின் தண்டனை எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில், தேசிய சராசரி தண்டனை விகிதத்தில் பாதியாக உள்ளது. மேலும், ஒரு காலத்தில் அம்பேத்கர் கொண்டிருந்த பார்வையின் மையமாக இருந்த சமூக நீதி, துரதிருஷ்டவசமாக வெறும் அரசியல் முழக்கமாக மாறிவிட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் உறுப்பினர்களுக்கு பதவி மறுப்பு செய்திகள் இந்த கடுமையான அநீதியை மேலும் அடிக்கோடிட்டு காட்டுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியால் விடுக்கப்பட்ட அழைப்பின்படி, நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டை தேசம் ஆண்டு முழுவதும் கொண்டாடுகிறது.

இந்த தருணம் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான நமது கூட்டு மற்றும் தனிப்பட்ட பொறுப்பின் சக்திவாய்ந்த நினைவூட்டலாக அமையட்டும். இந்த தருணத்தை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவோம். அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை நிலைநிறுத்தவும் உள்வாங்கவும், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் சமூக நீதிக்காக இடைவிடாமல் போராடவும் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்