< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய கோவில் பூசாரி; காப்பாற்றிய 'தினத்தந்தி' நிருபர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ

தினத்தந்தி
|
18 Oct 2024 12:26 PM IST

கோவில் பூசாரி இரும்பு கதவை திறக்க முயற்சித்தபோது அவரை மின்சாரம் தாக்கியது.

சென்னை,

சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் உள்ளது. அங்கு மூலக்கடையை சேர்ந்த முரளி (34) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 15ம் தேதி காலை 8 மணிக்கு கொட்டும் மழையில் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்றுள்ளார். கனமழை காரணமாக கோவிலை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. அவர் தண்ணீரில் இறங்கி நடந்து சென்ற கோவிலின் இரும்பு கதவை திறக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், கோவிலின் அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து கோவிலின் இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை கவனிக்காத பூசாரி முரளி இரும்பு கதவை திறக்க முயற்சித்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் துடிதுடித்தபடி இரும்பு கதவிலேயே சாய்ந்துவிட்டார்.

பூசாரி மீது மின்சாரம் பாய்ந்ததை கவனித்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.

கோவிலின் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்த குடும்பத்தை சேர்ந்த பெண் மின்சாரம் தாக்கிய பூசாரியை காப்பற்ற முயன்றார். அவர் தண்ணீரில் இறங்கியபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் அவர் பின்வாக்கினார்.

அப்போது, அப்பகுதியில் வசித்து வரும் தினத்தந்தி நிருபர் இசக்கி ராஜாவும், ஆன்லைன் மூலம் பொருட்களை சப்ளை செய்யும் சரக்கு ஆட்டோ டிரைவரும் ஓடோடி வந்தனர். ஆட்டோ டிரைவர் தண்ணீரை மிதித்ததும் அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால், அவரும் கீழே விழுந்தார்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட தினத்தந்தி நிருபர் இசக்கி ராஜா, அருகில் உள்ள வீட்டின் சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய சவுக்கு கட்டையை தூக்கி கொண்டு வந்து பூசாரியின் கையை இரும்பு கதவில் இருந்து விடுவிக்க முயற்சித்தார்.

ஈரமாக இருந்த சுவுக்கு கட்டை வழியாக இசக்கி ராஜாவையும் மின்சாரம் தாக்கியது. ஆனாலும், அவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கட்டையால் தட்டி பூசாரியின் கையை மின்சாரம் பாய்ந்த கதவில் இருந்து விடுவித்தார்.

பின்னர், சாய்ந்து விழுந்த பூசாரியை லாவகமாக கையைப்பிடித்து இழுந்து தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வந்தார். மின்சாரம் தாக்கியதில் மூச்சு, பேச்சில்லாமல் கிடந்த பூசாரியின் நெஞ்சை பிடித்து அழுத்தி சி.பி.ஆர். எனப்படும் உயிர் காக்கும் முதல் உதவி சிகிச்சையை இசக்கி ராஜா அளித்தார். ஆட்டோ டிரைவரும் வாய் வழியாக ஊதி பூசாரிக்கு உயிர்மூச்சு அளித்தார். சரியான நேரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டதால் பூசாரி முரளி கண் விழித்தார். பின்னர், உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்சில் இருந்த மருத்துவ பணியாளர்கள், பூசாரி உடலை பரிசோதித்ததில் அவர் இயல்பாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மின்சாராம் தாக்கிய பூசாரியின் உயிரை காப்பற்றிய தினத்தந்தி நிருபர் இசக்கி ராஜா மற்றும் ஆட்டோ டிரைவரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

அதேவேளை, பூசாரி மீது மின்சாராம் பாய்வது, அவர் மீட்கப்படும் பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயுள்ளன. அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்