'டானா' புயல் எச்சரிக்கை: புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
|வெளிமாநிலங்கள் செல்லும் ரெயில்களும் என 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே நேற்று தெரிவித்திருந்தது.
சென்னை,
வங்கக்கடலில் உருவான 'டானா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் ரெயில்களும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ரெயில்களும், வெளிமாநிலங்களில் இருந்து வெளிமாநிலங்கள் செல்லும் ரெயில்களும் என 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கூடுதலாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12830) நாளை (24-ந்தேதி) ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு புவனேஸ்வர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12829) 27-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.