கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
|தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர்
சென்னை,
தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால், இன்று காலை முதலே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும் மக்கள் அதிக அளவில் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பஸ் நிலையங்கலில் இன்று காலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இன்று மாலையில் இருந்தே பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் மேலும் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் எனத்தெரிகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை கோயம்பேடு, பிராட்வே, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மாநகர பஸ்களுக்காக, பயணிகள் அதிக அளவில் காத்திருப்பதை காண முடிந்தது.
நாளை காலை பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் கூடுதல் பஸ்களை இயக்க தமிழக அரசுபோக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அலைமோதுவதால், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.