ஓசூரில் பட்டாசு வாங்க குவிந்த கூட்டம்; மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்
|ஓசூரில் பட்டாசு வாங்க மக்கள் கூட்டம் குவிந்த நிலையில், மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநில எல்லை அருகே உள்ள கிருஷ்ணகிரி ஜூஜூவாடி, பாகலூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு பாட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தால், பட்டாசு வாங்க வருபவர்கள் தங்கள் கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை சாலையோரங்களில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
இதுமட்டுமின்றி, அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் மாநில எல்லைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.