மாநில செய்திகள்
பெண்களுக்கு எதிரான குற்றம்; சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

தினத்தந்தி
|
11 Jan 2025 11:28 AM IST

தமிழக சட்டசபையில், 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி மாணவ அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த விவகாரம் தமிழக சட்டசபையில் நடந்து வரும் கூட்டத்தொடரிலும் தாக்கம் ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்த மசோதா ஒன்று அவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் இன்று நிறைவேறியது. இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்படும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையும் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்