< Back
மாநில செய்திகள்
சென்னை மெரினாவில் போலீசாரை ஆபாசமாக திட்டிய ஜோடிக்கு ஜாமீன் - கோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

சென்னை மெரினாவில் போலீசாரை ஆபாசமாக திட்டிய ஜோடிக்கு ஜாமீன் - கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
8 Nov 2024 12:57 PM IST

போலீசாரை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் கைதான இருவருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை எடுக்குமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறியபோது, அந்த காரில் இருந்த ஜோடி, போலீசாரை ஆபாசமாக திட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு கடந்த மாதம் 25ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 4ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்து, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் இருவரும் நடந்துகொண்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக எவ்வளவு நாட்கள் இருவரையும் சிறையில் வைக்கப் போகிறீர்கள்? என்று காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சந்திரமோகன் மட்டும் தினசரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்