< Back
மாநில செய்திகள்
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமானுக்கு வன்னி அரசு கண்டனம்
மாநில செய்திகள்

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமானுக்கு வன்னி அரசு கண்டனம்

தினத்தந்தி
|
8 Jan 2025 8:57 PM IST

சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், தமிழ் மொழியை சனி என்று கூறிய பெரியார் எந்த மொழியில் எழுதினார். என்னுடையை மொழியை இழிவாக்கி, ஒன்றுமில்லை என கூறவிட்டு.. அதில் என்ன சமூக மாற்றம், சீர்திருத்தம், அரசியல். அடிப்படையே தவறாக உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக சீமான் பேசினார். மேலும் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். சீமானின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இந்த நிலையில், பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சுக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"தந்தை பெரியார் குறித்து மிகுந்த தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் சீமான். நாதக தொடங்குவதற்கு முன் தந்தை பெரியார் ஒருவர் தான் புரட்சியாளர் என பேசிய சீமான் கட்சி ஆரம்பித்த பின் அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது இந்தியா முழுக்க சமூகநீதி அரசியலின் மீட்பர்களாக இருப்பவர்கள் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் ஆவார்கள். அதுமட்டுமல்லாது, பார்ப்பனீய- ஆரிய எதிர்ப்பு அரசியலை வரலாற்றுத்தரவுகளோடு நிறுவியவர்களும் இவர்களே. ஆரியத்தை நிறுவ வேண்டுமானால் திராவிட அரசியலை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை தமிழ்நாட்டில் பாஜகவும் சங் பரிவார அமைப்புகளும் செயல்படுத்த தொடங்கி விட்டனர்.

அதனுடைய ஒரு பகுதி தான் சீமானை வைத்து தீவிரமாக்குகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். இதன் மூலம் தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்குவதே சங்பரிவாரக்கும் பலின் சதித்திட்டம். அச்சதிக்கான அசைன்மென்ட் சீமானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தந்தை பெரியார் குறித்து மிக மோசமாக தூற்றுகிறார். ஆரிய- பார்ப்பனியத்தின் அடிவருடியாக செயல்படும் சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்