தொடர் மழை... தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
|தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி,
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும் எனவும், இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தென் தமிழகத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், மழையால் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;
"தூத்துக்குடி மாவட்டத்தில் 32 குளங்கள் 70 சதவீதம் நிரம்பியுள்ளன. மக்கள், கால்நடைகள் நீர்நிலைகளில் இறங்காமல் கண்காணிக்க வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. மழையை எதிர்கொள்ள போதுமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. 97 வெள்ள நிவாரண முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மீட்புக்குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பது குறித்து வானிலை நிலவரத்தை பொறுத்து முடிவெடுக்கப்படும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.