< Back
மாநில செய்திகள்
தொடர் மழை: விழுப்புரம் மாவட்டத்தில் 1,056 ஏரிகள் நிரம்பின
மாநில செய்திகள்

தொடர் மழை: விழுப்புரம் மாவட்டத்தில் 1,056 ஏரிகள் நிரம்பின

தினத்தந்தி
|
15 Dec 2024 4:37 PM IST

தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் 1,056 ஏரிகள் நிரம்பின.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த பெஞ்சல் புயல், விழுப்புரம் மாவட்டத்தில் கோரத்தாண்டவமாடியது. இந்த புயலால் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 30, 1-ந் தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து அவை வேகமாக நிரம்பின. இதற்கிடையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்தது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 505 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் 779 ஏரிகளும் ஆக மொத்தம் 1,284 ஏரிகள் உள்ளன. இவற்றில் பொதுப்பணித்துறை ஏரிகளில் 277 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. 178 ஏரிகளில், 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையும், 11 ஏரிகளில் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையும், 23 ஏரிகளில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், 16 ஏரிகளில் 25 சதவீதம் வரையும் தண்ணீர் உள்ளது.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை ஏரிகளான 779 ஏரிகளும் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறிச் செல்கிறது. மேலும் அந்த ஏரிகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்