< Back
மாநில செய்திகள்
மோதல் விவகாரம்: வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி ஆலோசனை
மாநில செய்திகள்

மோதல் விவகாரம்: வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி ஆலோசனை

தினத்தந்தி
|
27 Feb 2025 7:03 PM IST

காவலாளி, பாதுகாவலர் கைதை தொடர்ந்து வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

நடிகை பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் போலீசார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் வீட்டில் சம்மன் ஓட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று போலீசார் விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சீமானின் காவலாளி போலீசாரை தாக்கியதோடு கையில் இருந்து துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார், கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் சீமான் வீட்டில் காவலாளி மற்றும் உதவியாளர் காவலர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் தரப்பில் 2 புகார்கள் அளிக்கப்பட்டன. இதன்படி துப்பாக்கி காட்டி மிரட்டியதாக ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் புகார் அளித்தநிலையில், உடனிருந்த காவலர்கள் தங்களை தாக்கியதாக அளிக்கப்பட்ட மற்றொரு புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீமான் வீட்டில் காவலாளி, பாதுகாவலர் கைதை தொடர்ந்து புகார் அளிப்பது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் நீலாங்கரை இல்லத்தில் சீமான் மனைவி கயல்விழி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை 12 வாரங்களில் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடைகோரி சீமான் மேல்முறையீடு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்