
தோழியுடன் விடிய விடிய மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு

கேளம்பாக்கம் அருகே, அதிகளவு மது குடித்த மாணவி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
வார விடுமுறை நாட்களில் ஏராளமான இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பொழுதை போக்குவதற்காக போதைப்பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறையும் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் இளைய சமுதாயம் போதையின் பின்னால் செல்வது வருத்தமாக உள்ளது.
இந்தநிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பி.சி.ஏ படித்து வந்த மாணவி அஸ்வினி (வயது 19) ஏகாட்டூர் பகுதியில் தனியார் விடுதியில் தங்கியுள்ள தன்னுடைய தோழியின் அறைக்கு சென்றுள்ளார். வார விடுமுறையை கழிக்க மாணவி சென்றதாகக் கூறப்படும் நிலையில் இரவு முழுவதும் விடிய விடிய மாணவி மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென மாணவிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், தோழியின் உதவியுடன் இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி அஸ்வினி, விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு வந்துள்ளார். ஊரிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து அஸ்வினி மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், தனது தோழியின் அறையில் தங்கி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகவும், அதுவே அவரது உயிரிழப்புக்கு காரணம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.