< Back
மாநில செய்திகள்
கோவை: தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை
மாநில செய்திகள்

கோவை: தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை

தினத்தந்தி
|
26 Dec 2024 3:56 AM IST

குட்டி யானையை அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

கோவை,

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் காலை கூட்டத்தில் இருந்து பிறந்து 1 மாதமே ஆன குட்டி ஒன்று தனியாக சுற்றி கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று குட்டி யானையை மீட்டனர்.

பின்னர் குட்டியை யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது குட்டி யானையின் தாய் பன்னிமடை காப்புக்காடு பகுதியில் அமர்ந்த நிலையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவலறிந்த வனத்துறையினர், யானை உயிரிழந்தது குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த யானையின் முக்கிய பாகங்கள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யானை இறந்தது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,

இறந்த யானைக்கு 30 வயது இருக்கும். உள் உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட்டு, அமர்ந்த நிலையில் உயிரிழந்துள்ளது. ஒரு மாத குட்டி யானையை, அதன் கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்து வருகிறோம். பொன்னூத்தம்மன் கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் 10 யானைகள் கொண்ட கூட்டத்துடன் குட்டியை சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த பெண் யானைகள் இந்த குட்டியை சேர்த்துக்கொள்ளவில்லை.

இதனைத்தொடர்ந்து 2-வது நாளான நேற்றும் குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் யானையை கூட்டத்துடன் சேர்க்க முடியவில்லை. இதுபோன்று 4 முறை முயற்சிகள் நடைபெறும். அதன்பின்னரும் யானை கூட்டத்துடன் சேர்க்க முடியவில்லை என்றால், உயர் அதிகாரிகளின் உத்தரவை பெற்று குட்டி யானையை காப்பகத்திற்கு கொண்டு சென்று பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்