கோவை: பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வந்தபோது, பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்டதும் சுதாரித்துக் கொண்ட டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.
பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். இதையடுத்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.