< Back
மாநில செய்திகள்
வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகத்தை காக்கும் கடவுளாக முதல்-அமைச்சர் திகழ்கிறார் - அமைச்சர் சேகர்பாபு
மாநில செய்திகள்

'வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகத்தை காக்கும் கடவுளாக முதல்-அமைச்சர் திகழ்கிறார்' - அமைச்சர் சேகர்பாபு

தினத்தந்தி
|
3 Dec 2024 3:44 PM IST

வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகத்தை காக்கும் கடவுளாக முதல்-அமைச்சர் திகழ்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெஞ்சல் புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவியாக, வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகத்தை காக்கும் கடவுளாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். முந்தைய காலங்களில் 13 செ.மீ. மழை பெய்தாலே சென்னை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும். ஆனால் தற்போது வெள்ளம் வேகமாக வடிந்தததற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளே காரணம்.

எதிர்க்கட்சிகள் குறைகளை சுட்டிக்காட்டினால் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் வஞ்சக சூழ்ச்சியோடு அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். கடந்த காலங்களை அவர் திரும்பி பார்க்க வேண்டும். 2015-ம் ஆண்டு சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதால் 280-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதை யாரும் மறக்க முடியாது.

சாத்தனூர் அணையை பொறுத்தவரை, முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி 25-ந்தேதியில் இருந்து படிப்படியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் முன்னறிவிப்போடுதான் 1 லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் காரணமாகவே எந்தவித உயிர்சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. பல உயிர்களை காப்பாற்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் வஞ்சக எண்ணத்தோடு குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

தமிழக முதல்-அமைச்சரின் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களும் பாராட்டிக் கொண்டு இருக்கின்றன. எதிர்க்கட்சி தலைவருக்கு உண்மையிலேயே மனசாட்சி இருக்குமானால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெள்ள நிவாரண நிதியை கேட்க வேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்