< Back
மாநில செய்திகள்
கொடைக்கானல் மலைப்பகுதியில் தவழ்ந்து சென்ற மேகக்கூட்டங்கள்.. சுற்றுலா பயணிகள் வியப்பு
மாநில செய்திகள்

கொடைக்கானல் மலைப்பகுதியில் தவழ்ந்து சென்ற மேகக்கூட்டங்கள்.. சுற்றுலா பயணிகள் வியப்பு

தினத்தந்தி
|
5 Jan 2025 3:24 AM IST

மாலை பொழுதில் மலை முகடுகளுக்கு நடுவே கடல் அலைகள் போன்று மேக கூட்டங்கள் திரண்டு வந்தன.

கொடைக்கானல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது உறைபனி சீசன் நிலவுகிறது. இதையொட்டி கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இரவு நேரத்தில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் பதிவாகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பகல் முழுவதும் கடும் வெப்பமும், மாலையில் கடும் குளிரும் நிலவுகிறது.

இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று அதிகாலை உறைபனி ஏற்பட்டது. பகலில் வெயில் சுட்டெரித்தது. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மேகங்கள் தரையிறங்கி வருவதும், மலைகளை முத்தமிடும் காட்சிகளும் ரம்மியமாக இருக்கும். அந்த வகையில் நேற்று அந்திசாயும் மாலை பொழுதில் மலை முகடுகளுக்கு நடுவே கடல் அலைகள் போன்று மேக கூட்டங்கள் திரண்டு வந்தன. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வியந்தனர். மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் தினமும் காலையில் சூரிய உதயமாகும்போது கோக்கர்ஸ்வாக் பகுதியில் இதுபோன்று மேகங்கள் மாயாஜாலம் காட்டுகின்றன. இதனை காண்பதற்காக இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் குளிரை பொருட்படுத்தாமல் கோக்கர்ஸ்வாக் பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்