< Back
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: விமான கட்டணம் கிடுகிடு உயர்வு
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை: விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

தினத்தந்தி
|
21 Dec 2024 11:51 PM IST

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை,

வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, அத்துடன், அரையாண்டு விடுமுறை மற்றும், ஆங்கில புத்தாண்டு என தொடர் விடுமுறை வர உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் புறப்பட்டு செல்ல தயாராகி வருகின்றனர்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. மேலும், தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தென் மாவட்ட மக்கள் செல்லக்கூடிய தூத்துக்குடி, மதுரை மற்றும் திருவனந்தபுரம், கொச்சி விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், தொடர் விடுமுறை எதிரொலியாக, விமானத்தில் பயணம் செய்வதற்காக புக்கிங் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விமான டிக்கெட் கட்டணங்களும் 3-ல் இருந்து 4 மடங்கு வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளன.

அதன்படி சென்னை- தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.4,796 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.14,281 ஆகவும், சென்னை- மதுரைக்கு வழக்கமாக இருந்த ரூ.4,300 கட்டணம் ரூ.17,695 ஆகவும், சென்னை- திருச்சி வழக்கமாக ரூ.2,382 ஆக இருந்த கட்டணம் ரூ.14,387 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல, சென்னை- கோவை வழக்கமாக இருந்த ரூ.3,485 கட்டணம் ரூ.9,418 ஆகவும், சென்னை- சேலம் வழக்கமாக இருந்த ரூ.3,537 கட்டணம் ரூ.8,007 ஆகவும், சென்னை- திருவனந்தபுரத்துக்கு ரூ.3,821 ஆக இருந்த கட்டணம் ரூ.13,306 ஆகவும், சென்னை- கொச்சி இடையே வழக்கமாக இருந்த ரூ.3,678 கட்டணம் ரூ.18,377 ஆகவும், சென்னை-மைசூரு வழக்கமாக இருந்த ரூ.3,432 கட்டணம் ரூ.9,872 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல, சென்னையில் இருந்து வெளிநாடு செல்லும் விமானங்களின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

விமானங்களில் குறைந்த கட்டணத்தில் இருந்த டிக்கெட்டுகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. இறுதியாக உள்ள டிக்கெட்டுகள் அதிகமாகத்தான் இருக்கும். இவை வழக்கமானதுதான். டிக்கெட் கட்டணம் உயர்வு என கூற முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், கடைசி நேரத்தில் புக்கிங் செய்யும்போது கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன், விடுமுறைக்கு செந்த ஊர் செல்ல வேண்டும் என்பதற்காக அதிக கட்டணம் இருந்தாலும், பயணிகள் புக்கிங் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்