< Back
மாநில செய்திகள்
களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
மாநில செய்திகள்

களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தினத்தந்தி
|
25 Dec 2024 12:56 AM IST

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நள்ளிரவு முதல் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.

சென்னை,

உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்துமஸ் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை சாந்தோம் பேராலயத்தில் நடைபெற்று வரும் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நெல்லை பாளையங்கோட்டை சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் பழமைவாய்ந்த கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு திருப்பலியில் போப் பிரான்சிஸ் பங்கேற்றுள்ளார். கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்