பள்ளியில் குழந்தை உயிரிழந்த விவகாரம்: அறிக்கை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு
|குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த பழனிவேல்-சிவசங்கரி தம்பதியினரின் குழந்தை லியா லட்சுமி(வயது 3), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார்.
இந்நிலையில், குழந்தை லியா லட்சுமி இன்று பள்ளியில் உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த கழிவுநீர் தொட்டியின் மீது போடப்பட்டிருந்த இரும்பு தகடு துருபிடித்து இருந்த நிலையில், மூடி உடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்துள்ளது.
குழந்தை லியா லட்சுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததை அறிந்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இந்த நிலையில், குழந்தை உயிரிழந்த விவகாரம் தொர்பாக அறிக்கை சமர்ப்பிக்க பள்ளி நிர்வாகத்திற்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.