விழுப்புரத்தில் முதல்-அமைச்சரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
|வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் அவர் ஏற்கனவே அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கள ஆய்வை முடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 2 நாள் சுற்றுப் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வர இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் களஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, 28.11.2024 மற்றும் 29.11.2024 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.