ரிமோட் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஜெயக்குமார் பேட்டி
|நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளதை நாங்களும் வரவேற்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்னும் 15 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க. குடும்ப நலனை மட்டும் கருத்தில்கொண்டு ஆட்சி நடத்துவதை, பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம், ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்ட திருமண உதவித்தொகை உள்பட பல்வேறு நலத் திட்டங்களை முடக்கி உள்ளதையும், மக்கள் விரோத செயல்களையும், தி.மு.க. ஆட்சியில் தொடரும் போதை கலாசாரம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், ஆளும் கட்சியினரின் அடாவடி கட்டப்பஞ்சாயத்துகள் குறித்தும், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரிமோட் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலை குறித்தும், பொதுமக்களிடம் விளக்கி தேர்தலின்போது களப்பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கூறியுள்ளோம்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளதை, பொதுச்செயலாளர் பழனிசாமி வரவேற்றுள்ளார். நாங்களும் வரவேற்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.