முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பகல் கனவு காண்கிறார் - எடப்பாடி பழனிசாமி
|தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிக் கொள்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம்,
அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
நான் கனவு காண்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவர்தான் பகல் கனவு காண்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எந்த சரிவும் இல்லை, தி.மு.க.வுக்குதான் சரிவு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் பொறுப்பு வாங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்துள்ளார்.
தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டிக் கொள்கிறார். பொய்யை பொருந்துவது போல் கூறினால் உண்மை திருதிருவென்று விழிக்கும் என்பது போல் முதல்வர் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தேசிய கட்சி கேட்டது. வலிமையான கட்சியான அ.தி.மு.க. பூத்துக் குலுங்கும் மலர் போன்றது. மலராக அ.தி.மு.க. பூத்துக் குலுங்க கூட்டணிக் கட்சிகள் தேனீக்களாய் வரும்.
தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் கட்சியின் உயர் பொறுப்புக்கு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.