நடிகர் சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
|மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி அமரன் படம் உருவாகி உள்ளது.
சென்னை,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்கில் அமரன் திரைப்படம் வெளியாகியுள்ளது
இந்த படம் இந்த திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில் பிரபலங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், துணை முதல்-அமைச்சர் உதயநிதி மற்றும் பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
நண்பர் கலைஞானி கமலஹாசனின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று #அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார், மேஜர் முகுந்த் வரதராஜன் - இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவ கார்த்திகேயன், சாய்பல்லவி
மற்றும் #அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பிக் சல்யூட்! என பதிவிட்டுள்ளார்.