
கோப்புப்படம்
நாகப்பட்டினம்
நாகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல்

அரசு விழா, திருமண விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார்.
நாகப்பட்டினம்,
நாகையில், இன்று அரசு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகை வந்தார். இதற்காக அவர்நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு நாகை சென்றடைந்தார்.
நாகை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தூர் ரவுண்டானாவில் மாவட்ட தி.மு.க. சார்பில் செயலாளர் கவுதமன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை புத்தூர் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவருமான கவுதமன் மகன் மகிபாலன்-உமாமகேஸ்வரி திருமண விழா நடக்கிறது.
இந்த திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து நாகை புதிய பஸ்நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, உள்ளிட்ட 21 துறைகளில் இருந்து 38,956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அதேபோல பல்வேறு துறையின் கீழ் ரூ. 820 கோடி மதிப்பில் அரசு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத்தொடர்ந்து பால்பண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு மதிய உணவு அருந்துகிறார்.
மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கார் மூலம் திருச்சி சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
இந்த விழாக்களில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை வந்துள்ளநிலையில், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், தஞ்சை, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.