புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
|முதல்-அமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர் எம்.டி.ஆர் ராமச்சந்திரன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்.டி.ஆர் ராமச்சந்திரன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளருமாகிய ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத்தின் சார்பில் முதல்-அமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.