சிதம்பரம் நடராஜர் கோவில்: பொது நிர்வாகத்தில் கும்பலாட்சி நீடிக்கலாமா? - கே.பாலகிருஷ்ணன் கேள்வி
|தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது, நல்ல அறிகுறி கிடையாது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை, தீட்சிதர்களின் தனிச் சொத்து போல கருதிக்கொண்டு ஆணவத்துடன் செயல்படுவதை சுட்டிக்காட்டி, சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ள கருத்துகள் நியாயமானவை, வரவேற்புக்குரியவை. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதற்காக நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது. இதனை விசாரித்த இந்துசமய அறநிலையத்துறை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது. ஆனால், இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி, தீட்சிதர்களின் விமர்சனத்திற்குரிய நடவடிக்கைகளை பட்டியலிட்டு வேதனை தெரிவித்துள்ளார். நடராஜர் கோவிலில் தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறிய நீதிபதி, மன கஷ்டங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுவதாக கூறினார்.
தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது, ஒரு நல்ல அறிகுறி கிடையாது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைப்பதாக கூறினார். மேலும், நடராஜர் கோவிலே தீட்சிதர்களின் சொத்து என நினைத்துக் கொண்டு, தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுவதாக சுட்டிக்காட்டிய அவர் இந்த போக்கை விமர்சித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாத நிலைமையை சி.பி.ஐ(எம்) உள்ளிட்டு பல்வேறு இயக்கங்களும் சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் நிலையில், தீட்சிதர்களின் போக்கினால் பக்தர்களின் வருகை குறைந்து கோவில் பாழாகும் என்ற எச்சரிக்கையை நீதிபதியும் வேதனையுடன் பகிர்ந்துகொண்டிருப்பது முக்கியமாகிறது.
வாரணாசி காசி விசுவநாதர் கோவில் தனிச் சட்டம் மூலம் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது. அதே முறையில் தனிச் சட்டம் மூலம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகமும் முறைப்படுத்தப்பட வேண்டும், கும்பலாட்சி போக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு மீண்டும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.