
சென்னிமலை முருகன் கோவில்: களைகட்டிய தைப்பூச திருவிழா தேரோட்டம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னிமலை,
சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர நாட்களில் மட்டும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் தைப்பூச தேரோட்டம் 14 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தசூழலில் இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது முதல் சென்னிமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் அன்று முதல் தினமும் இரவு பல்வேறு கட்டளைதாரர்களின் சார்பில் முருகப்பெருமானின் உலா காட்சி நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் தங்களது மண்டபக்கட்டளை நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தைப்பூச தேரோட்டம் இன்று காலை 5.30 மணிக்கு மேல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இதற்காக நேற்று வெளியூர்களில் இருந்து காவடி மற்றும் சலங்கை ஆட்டத்துடன் வந்த பக்தர்கள் சென்னிமலையில் குவிந்தனர். சென்னிமலை கைலாசநாதர் கோவிலின் முன்பு நகரமே அதிரும் வகையில் மேள தாளங்களுடன் பக்தர்களின் சலங்கை ஆட்டம் நடைபெற்றது.
பக்தர்களின் வசதிக்காக ஈரோடு, பெருந்துறை, சிவகிரி, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. மலைப்பாதை வழியாக மலை கோவிலுக்கு செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கோவிலுக்கு சொந்தமான 2 பஸ்களுடன் கூடுதலாக 4 பஸ்கள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி போக்குவரத்து போலீசார் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேரோட்டம் நடைபெறும் நேரங்களில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்காக வெப்பிலி பிரிவு, அய்யம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
வருகிற 15-ந் தேதி மகா தரிசனம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.