< Back
மாநில செய்திகள்
சென்னை: மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த கணவரால் பரபரப்பு
மாநில செய்திகள்

சென்னை: மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த கணவரால் பரபரப்பு

தினத்தந்தி
|
19 Nov 2024 10:16 PM IST

கணவரால் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்க்கப்பட்டதில் சுகன்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை,

சென்னை குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி பெயர் சுகன்யா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், சுகன்யா 3-வது முறையாக கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவுக்கு இன்று திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்த மனோகரன், சுகன்யாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார். இதில் சுகன்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதற்கிடையே, சுகன்யாவுக்கு அவரது கணவரே வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த தகவல் வேகமாக பரவியது. இதையடுத்து உடனடியாக சுகாதாரத்துறையினர் மனோகரன் வீட்டுக்கு வந்தனர். அப்போது சுகன்யா மற்றும் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசில் புகார் செய்தனர். மனோகரன் மீது புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் மனோகரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும்போது பெண்ணின் உயிருக்கும், குழந்தைக்கும் ஆபத்து என்பது ஏற்படும். இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அறிவுரைகளையும், விழிப்புணர்வுகளையும் வழங்கி வந்தாலும், சில இடங்களில் இதுபோன்று நடந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

மேலும் செய்திகள்