சென்னை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: மேலும் 2 பேர் கைது
|சென்னை கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் 21 வயதுடைய மன வளர்ச்சி குன்றிய மாணவி ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அன்று மாணவி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது தந்தை விசாரித்த போது, 'என்னை கல்லூரி வாசலில் இருந்து சிலர் வெளியே அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர்' என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ந்துபோன அவர், சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். புகாரின்பேரில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 8 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்வதற்கு 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஆண்கள் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் திருத்தணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணி மற்றும் சேலத்தை சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேடை தனிப்படை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.