< Back
மாநில செய்திகள்
சென்னையில் மீண்டும் தொடங்கிய பறக்கும் ரெயில் சேவை: பூங்கா நகரில் நிற்காது என அறிவிப்பு
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் தொடங்கிய பறக்கும் ரெயில் சேவை: பூங்கா நகரில் நிற்காது என அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Oct 2024 6:26 AM IST

சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் வெகுநாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சென்னை,

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரெயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் கடற்கரை - எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில் 4½ கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பீட்டில் கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி 4-வது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அப்போது 7 மாதங்களுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையில் மட்டுமே பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு பயணித்து வந்தனர்.

இந்தநிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு பறக்கும் ரெயில் சேவை இன்று தொடங்கியது. இருமார்க்கமாகவும் 90 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் வெகுநாட்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடற்கரை - வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி - கடற்கரை வரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை, மீண்டும் தொடங்கிய நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா ரெயில் நிலையத்தில் நிற்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்காத்தால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்