சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில்கள் நாளை முதல் இயக்கம்
|சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் புறநகர் மின்சார ரெயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தினசரி லட்சக்கணக்கான மக்கள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில், சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் பறக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனையடுத்து, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 4-வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. எனவே சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 45 ரெயில்களும், மறுமார்க்கத்தில் 45 ரெயில்களும் இயக்கப்பட உள்ளன. இதனால் புறநகர் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.